பயிர்களை சேதப்படுத்தும் புதியவகை பறவை


பயிர்களை சேதப்படுத்தும் புதியவகை பறவை
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் புதிய வகையை சேர்ந்த பறவையால் நெல்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் புதிய வகையை சேர்ந்த பறவையால் நெல்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

புதிய பறவை இனம்

மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பெரும்பச்சேரி, கட்டிகுளம், கொம்புக்காரனேந்தல், இடைக்காட்டூர், பதினெட்டாம்கோட்டை உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் 2 போக நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கோ 50, என்.எல்.ஆர், கல்சர் பொன்னி உள்பட 90 நாள் நெல்பயிர்களை பயிரிட்டுள்ளனர். இவ்வாறு பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் கடந்த 2 மாதமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த பகுதியில் புதிய வகை பறவையால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது.

இந்த புதிய பறவை குருவி போன்ற தோற்றத்தி்ல் சிவப்பு நிற மூக்கும், சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது. இந்த பறவை நெல்பயிர்களை துண்டிப்பதுடன், பயிரின் தண்டு பகுதியை மட்டும் கத்தரி வைத்து வெட்டியது போல் சேதப்படுத்துகிறது. இதனால் பயிர்கள் மீண்டும் வளருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

பயிர்கள் சேதம்

விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள நெல்பயிர்களை இந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி விட்டு செல்கிறது. குறிப்பாக மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பகுதியில் இதுவரை சுமார் 30 ஏக்கரில் பயிரிட்டு இந்த நெல் பயிர்களை முற்றிலும் அழித்து நாசமாக்கி உள்ளது. வயல்களில் காணப்படும் இப்பறவை விவசாயிகளை கண்டதும் அருகில் உள்ள கண்மாய்களுக்கு சென்று பதுங்கி விடுகிறது. பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மீண்டும் வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் நாள் முழுவதும் வயல்களை காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக வயல்களில் திரியும் நீர் காக்கை, காட்டுகோழி உள்ளிட்ட பறவைகள் நெல்பயிர்களை சேதப்படுத்தாது. ஆனால் இந்த புதிய வகை பறவைகள் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இப்பறவை எந்த வகை இணைத்தை சேர்ந்தது என்ற விவரம் விவசாயிகளுக்கு தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

விவசாயிகள் கவலை

மானாமதுரை பகுதியில் இந்த பறவை இனம் புதிதாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த பறவைகள் பயிர்களை சேதபடுத்திய விவரத்தை சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் சேதமான வயல்களை பார்வையிட, பறவைகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஏற்கனவே பயிர் காப்பீடு செய்திருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இயற்கை சீற்றம் உள்ளிட்டவற்றிற்குதான் இழப்பீடு தரமுடியும் என்றும், காட்டுப்பன்றி மற்றும் பறவைகளால் சேதமடைந்ததற்கு வனத்துறையினர்தான் இழப்பீடு தர வேண்டும் என கூறுகின்றனர். இதனால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


Next Story