நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்


நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்
x

கரூர் மாவட்டத்தில் புதிதாக நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கக்கோரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புன்னம், முன்னூர், கார்வழி கிராமங்களில் உள்ள கிரஷர்களால் ஏற்படும் மாசு ஏற்படுவது குறித்தும், பனை மரக்கொட்டைகள் தோகைமலை பஞ்சாயத்தில் நடவு செய்வது, உள்வீரராக்கியம் நெல் பயிர் காப்பீடு 2022-2023 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க கோருவது, கரூர் மாவட்டத்திற்கு புதிதாக நெல் சேமிப்பு கிட்டங்கி அமைப்பது, மேலக்கட்டளை ரெங்கநாதபுரம் கீழ் மாயனூர் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் வலது கரை வாய்க்கால் கடைமடைப்பகுதி தூர்வாருவது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

மேலும் தென்னிலை அமிர்தபுரி நியாய விலை கட்டிடம் புதிதாக கட்டுவது, தனியார் சிமெண்டு ஆலை பணிகள் தொடர்ந்து நடைபெறுவது, கள்ளப்பள்ளி மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பது, காவிரி குடிநீர் வழங்குவது, 100 நாள் திட்டத்தினை விவசாய பணிகள் பாதிக்காமல் இருக்க 5 மாதத்திற்கு நிறுத்தி வைப்பது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

காவிரி குடிதண்ணீர்

2021-22 நெற்பயிருக்கு பயிர்காப்பீடு தொகை வழங்குவது குறித்தும், காவிரி ஆற்றில் கழிவுநீர் வருவதை தடுப்பது, கிருஷ்ணராயபுரம் வட்டம், பாலராஜபுரம் கிராமத்தில் உள்ள வீரராக்கியம் ஏரியினை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைப்பது, கருங்காலப்பள்ளிக்கு காவிரி குடிதண்ணீர் வழங்குவது, குளித்தலை மயான கொட்டகை அமைத்து தருவது, தண்ணீர்பள்ளி சாலை சர்வே செய்வது, வெள்ளியணை குளத்தில் அதிகமாக வண்டல் மண் எடுப்பது, புனவாசிப்பட்டியில் போர்வெல் மோட்டார் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு உதவிர்தொகைக்கான ஆணைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.4,480 மதிப்பீட்டில் மின்விசை தெளிப்பானும், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் ரூ.664 மதிப்பீட்டில் பயறுவகை நுண்ணூட்டம் 5 கிலோவும், தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் ரூ.6,200 மதிப்பீட்டில் தெளிப்பானும் மொத்தம் 3 பயனாளிக்கு ரூ.11,344 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், இதில் ரூ.5,396 மானியத்துடன் கூடிய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஹீமோபிலியா நோய்

தொடர்ந்து இக்கூட்டத்தில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த 12-ந் தேதி கரூர் நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனைகள் நடத்தி பரிசோதனையின் முடிவினையொட்டி நேற்று 21 ஹீமோபிலியா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு (ரத்தம் உரையாமை நோய்) மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.


Next Story