அத்திப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி


அத்திப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி
x

அத்திப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.

கரூர்

சிறுத்தைப்புலி நடமாட்டம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியில் விவசாயிகள் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்றது. சில ஆடுகள் மர்மவிலங்கு கடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மர்மவிலங்கு சென்ற கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அது மர்மவிலங்கு அல்ல சிறுத்தைப் புலி தான் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் மேற்கண்ட பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து சிறுத்தைப் புலியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அத்திப்பாளையம் வந்து சிறுத்தைப்புலி கடித்து படுகாயம் அடைந்த ஆடுகளை பார்வையிட்டார். மேலும் சிறுத்தை புலி சென்ற கால் தடயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கேமராக்கள் பொருத்தம்

பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த வாரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்ததாக அறியப்பட்ட அந்த கால் தடத்தையும், இப்போது இங்குள்ள கால் தடத்தையும் வைத்து பார்த்ததில் பெருமளவு ஒற்றுமையாக உள்ளது. அந்த சிறுத்தைப்புலி இங்கு இடம் பெயர்ந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் சிறுத்தைப்புலியை பிடிக்க 4 கூண்டுகள், 3 வலைகள் மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிவிரைவு படையினர் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இரவு நேரங்களிலும் நன்றாக பதிவாக கூடிய வகையில் அதிநவீன 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

எனவே மாலை நேரம் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம், அவசியம் வருவதாக இருந்தால் 2, 3 பேர் சேர்ந்து கையில் கம்பு மற்றும் கை விளக்குடன் வரவேண்டும். ஆட்டுப்பட்டிகளில் இரவு முழுவதும் விளக்குகளை எரிய விடவும்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள 5 கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கரூர் மாவட்ட வன அலுவலர் சரவணன், ஓசூர் வன உயிரின கால்நடை டாக்டர் பிரகாஷ், வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story