ஆவின், ராயக்கோட்டை மேம்பாலங்கள் உட்பகுதியில் பூங்கா அமைக்கப்படும்
கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலங்களின் உட்பகுதியில் பூங்காக்கள் அமைக்கப்படும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம், சேலம் ஆவின் மேம்பாலம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:- ஆவின் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலங்களில் உட்பகுதி மற்றும் சுவர் பகுதிகளில் புதிய வர்ணம் அழகுப்படுத்திட வேண்டும். மேம்பாலம் கீழ் பகுதியில் பூங்காக்கள், மின்விளக்குகள் புதியதாக அமைக்கப்படும். இப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இங்கு போக்குவரத்து சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அங்கன்வாடி மையங்கள்
தொடர்ந்து, மேல்கரடிகுறி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை பதிவேடு, குடிநீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, சத்துமாவு, குழந்தைகளின் எடை ஆகியவற்றை பார்வையிட்டு அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் உரிய நேரத்திற்கு வருகை தருவதை உறுதி செய்யவேண்டும், மையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு, கற்றல் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு அனைத்து வீடுகளுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்கிறதா என்பதை பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தேசிய நெடுஞ்சாலைத்துறை (பராமரிப்பு மற்றும் கட்டுமானம்) திட்ட இயக்குனர் அதிபதி, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெயகுமார், கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) வெங்கடேசன், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.