நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது


நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது
x

நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருச்சி

தீப்பற்றி எரிந்த லாரி

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனைய கட்டுமான பணிக்கு மண் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் அருகிலேயே தனியார் ஒருவர் வணிக வளாகம் கட்டுவதற்கு மண் கொட்டி நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதில் சேலம் தம்மம்பட்டி கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த இருதயசாமிக்கு சொந்தமான டிப்பர் லாரி, மண் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தது.

சேலம் தம்மம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (வயது 55) நேற்று முன்தினம் மண்ணை கொட்டிவிட்டு அங்குள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு இரவில் லாரியிலேயே படுத்து தூங்கினார். நள்ளிரவு 12.45 மணிக்கு லாரியின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. சில வினாடிகளில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

டிரைவர் தப்பினார்

தீயின் வெப்பம் தாங்காமல் பால்ராஜ் திடுக்கிட்டு எழுந்தார். உடனே அவர் லாரியில் இருந்து கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டாரை போட்டு குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. காற்றுவேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வாகனத்தில் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, அரைமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story