பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்


பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வழுதலைக்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

வழுதலைக்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்தார்.

2.5 கிலோமீட்டர் தொலைவில்

சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாசல் ஊராட்சி உள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்திலேயே மிகப்பெரிய ஊராட்சியான திருமுல்லைவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் திருமுல்லைவாசல், தொடுவாய், வழுதலைக்குடி, ராதாநல்லூர் உள்ளிட்ட பெரிய மக்கள் தொகை கொண்ட கிராமங்களை கொண்டது.

இந்தநிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் வசிக்கும் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டுமானால் சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராதாநல்லூர் கிராமத்திற்கு சென்று வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

அமைச்சரிடம் மனு

இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் குடும்ப தலைவர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக வழுதலைக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வழுதலைக்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு வந்த அமைச்சர் மெய்யநாதனை நேரில் சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கலைவாணி ரமணிச்சந்திரன், வார்டு உறுப்பினர் முருகன் ஆகியோர் வழுதலைக்குடி கிராமத்தில் பகுதி நேர புதிய ரேஷன் கடை அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய விசாரணை செய்து வழுதலைக் குடி கிராமத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏ.க்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், உதவி கலெக்டர் அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story