கால்நடைகளை மேய்க்க பாஸ் வழங்க வேண்டும்


கால்நடைகளை மேய்க்க பாஸ் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 July 2023 8:45 PM IST (Updated: 1 July 2023 8:45 PM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளை மேய்க்க பாஸ் வழங்க வேண்டும்

கோயம்புத்தூர்

கோவை

வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க பாஸ் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.

கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அத்துடன் இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து பேசிய விவரம் வருமாறு:-

விவசாயிகளுக்கு 'பாஸ்'

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி:- கோவை மாவட்ட வனப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் மேய்த்து வருகிறார்கள். இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் சில இடங்களில் வனப்பகுதிக்குள் சென்று கால்நடைகளை மேய்க்க கூடாது என்று வனத்துறையினர் கூறுகிறார்கள். அத்துடன் முதலில் வழங்கப்பட்டதுபோன்று பாஸ் வழங்கப்படுவது இல்லை. எனவே விவசாயிகள் தடை இல்லாமல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல பாஸ் வழங்க வேண்டும்.

விவசாயி ஆறுச்சாமி:- தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. ஆனால் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. மழை வந்துவிட்டால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருவது தடை ஏற்படும். அதையும் மீறி தண்ணீர் வந்தால், அதிகளவில் தேங்காது. எனவே மழை வருவதற்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தரமான விதைகள்

தீத்திப்பாளையம் பெரியசாமி:- தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் தரமான விதை கிடைப்பது இல்லை. இதனால் மகசூல் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே தரமான விதைகளை வழங்க வேண்டும்.

கார்த்திக், மதுக்கரை:- தேங்காய் எண்ணெயில் கலப்படம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். நாச்சிபாளையத்தில் விவசாயிகள் அதிகமாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே அந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும். இதுதவிர பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினார்கள். அந்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story