மார்த்தாண்டம் அருகே பரபரப்பு:அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்ததில் பயணி படுகாயம்


மார்த்தாண்டம் அருகே பரபரப்பு:அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்ததில் பயணி படுகாயம்
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

மார்த்தாண்டம் அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கிய போது படிக்கட்டு உடைந்து கீழே விழுந்த பயணி படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கிய போது படிக்கட்டு உடைந்து கீழே விழுந்த பயணி படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தைக்கு சென்ற தொழிலாளி

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடையை சேர்ந்தவர் பால்சிங் (வயது60), தொழிலாளி. இவர் நேற்று காலையில் மார்த்தாண்டம் சந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கிருந்து பொருட்கள் வாங்கிய பின்பு மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அந்த பஸ் உண்ணாமலைகடையில் சென்ற போது அவர் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தப்பட்டது. உடனே பால்சிங் பின்பக்க படிக்கட்டு வழியாக பொருட்களுடன் இறங்கிக்ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில் பால்சிங் கீழே விழுந்து காலில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார்.

பொதுமக்கள் முற்றுகை

உடனே பஸ்சில் இருந்த சக பயணிகள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ெதாடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே படிக்கட்டு உடைந்து பயணி படுகாயம் அடைந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் திரண்டு வந்து அந்த பஸ்சை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை டிரைவரும், கண்டக்டரும் சமாதானப்படுத்தி பஸ்சை திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக கூறி அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story