இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வரவேற்கத்தக்கது - சரத்குமார்
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வரவேற்கத்தக்கது என சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1969-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தி.மு.க.வின் தலைவராகவும், 1969-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5 முறை தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்து தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்து, தமிழ்நாடு அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து, தேசியத் தலைவராக உயர்ந்தவர் கருணாநிதி.
முற்போக்கு சிந்தனையாளராக, பகுத்தறிவாளராக, இலக்கிய பேச்சாளராக, 5 முறை தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்து தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி சிறந்து விளங்கிய கருணாநிதியை, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தலைமுறையின் ஒப்பற்ற தமிழினத் தலைவர் என்று அனைவரும் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளருக்கு, தமிழ் கலை, இலக்கியத்தை பேணி பாதுகாத்தவருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் சிறந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று தான். அதனை யாராலும் மறுக்க முடியாது.
1,076 கி.மீ நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரையை எடுத்துக்கொண்டால் வெளிநாடுகளில், தீவுகளில் காணக்கிடைப்பது போல மெரினாவில், அதுவும் சென்னை கடல் பகுதியில் கடல் ஆமைகள், பவளப்பாறைகள் இல்லை என்று தான் ஆய்வுகள் கூறுகின்றன. நினைவுச்சின்னம் அமைக்க மெரினா கடற்கரையில் இருந்து 1,180 அடி தொலைவில் வங்கக்கடலுக்குள் செல்ல இருப்பது பெருந்தொலைவாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.