உடைந்த மரப்பாலம் வழியாக ஆபத்தான பயணம்


உடைந்த மரப்பாலம் வழியாக ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 10 Sep 2023 7:00 PM GMT (Updated: 10 Sep 2023 7:00 PM GMT)

நாகை அருகே உடைந்த மரப்பாலம் வழியாக கிராம மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்றை கடந்து செல்வதற்கு தினமும் சாகசம் செய்ய வேண்டி உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

நாகப்பட்டினம்

நாகை அருகே உடைந்த மரப்பாலம் வழியாக கிராம மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்றை கடந்து செல்வதற்கு தினமும் சாகசம் செய்ய வேண்டி உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

ஆறு, வாய்க்கால்கள்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரியும், கிளை ஆறுகளும், அதையொட்டி பாசன வாய்க்கால்களும் ஏராளம் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு செல்வதற்கு ஆற்றை கடக்க வேண்டி உள்ளது.

சில இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலங்கள் இல்லாததால் கிராமங்கள்- நகரங்கள் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்ற மோட்டார் வாகனங்கள் அதிகரித்து விட்ட இந்த காலத்தில் ஆற்றை கடக்க அகலமான கான்கிரீட் பாலங்கள் இல்லாதது கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்களை தினசரி அவதிப்பட வைக்கிறது. சில இடங்களில் ஆற்றை கடப்பதற்கு மரப்பாலங்களே பயன்படுத்தப்பட்டு வருவது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

மரப்பாலம்

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமம் கொத்தங்காடு பகுதியில் அடப்பாறு உள்ளது. இந்த ஆற்றை கடந்து செல்வதற்கு மரப்பாலமே இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இந்த மரப்பாலத்தின் வழியாகத்தான் மெயின் ரோட்டில் இருக்கும் கள்ளிமேட்டுக்கு சென்று, அங்கிருந்து நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற நகர பகுதிகளுக்கு கிராம மக்கள் பஸ் ஏறி செல்ல வேண்டும்.

நகர பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ள இந்த பாலம் இல்லையென்றால் கிராம மக்கள் 5 கி.மீ. தூரம் சுற்றி செம்போடை, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏற வேண்டி உள்ளது.

உடைந்த நிலையில்...

போக்குவரத்துக்கு முக்கியமான ஒரே மரப்பாலமும் உடைந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே துண்டு, துண்டாக உடைந்து காணப்படும் மரப்பாலத்தை கிராம மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள்.

சில நேரங்களில் மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போதே மரப்பலகை உடைந்து விடுகிறது. இதனால் சிலர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலம் வழியாக ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடைந்த மரப்பலகைகளுக்கு இடையே அவர் நிலை தடுமாறியதில் கீழே விழுந்து விட்டார். அதேபோல பெண்கள் சிலரும் மரப்பாலத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

கான்கிரீட் பாலம்

ஆற்றை கடப்பதற்காக உடைந்த மரப்பாலத்தில் தினமும் சாகசம் செய்ய வேண்டி இருப்பதாக கிராம மக்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.

கொத்தங்காடு அடப்பாற்றின் குறுக்கே உடைந்த நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக அகலமான கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story