யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும்
கோவை மாவட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
கோவை மாவட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
முத்தரப்பு கூட்டம்
கோவை மாவட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்கும் வகையில் வனத்துறை, விவசாயிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி, யானை-மனித மோதலை தடுக்க விவசாயிகளின் ஆலோசனையை கேட்டறிந் தார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-
அகழியை ஆழப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி:- யானை, காட்டுப்பன்றி போன்றவை உணவு, தண்ணீர் தேடிதான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறது.
எனவே வனப்பகுதிக்குள்ளே அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வன ஊழியர் களின் பற்றாக்குறையை போக்குவதுடன், மலையடிவாரத்தில் வெட்டப்பட்ட அகழியின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்.
மகாலட்சுமி (கணுவாய்) :- கணுவாய், தடாகம் பகுதியில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் கிராமப் பகுதிக்குள் வந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் இழப்பீடு
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி:- கோவை மாவட்டத்தில் காட்டு யானைகள், காட்டுப்பன்றி, மயில் தொல்லை அதிகமாக இருக்கிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாயிகள் பாதிப்பை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும்.
சசிகலா (முள்ளாங்காடு) :- போளுவாம்பட்டி வனச்சரகம் தாணிக்கண்டி முதல் முள்ளாங்காடு வரை அகழி வெட்டப்பட்டு உள்ளது. அது ஆழம் குறைவாக இருப்பதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே அகழியை ஆழப்படுத்தி னால் யானைகள் வராது.
காட்டுப்பன்றிகள் தொல்லை
காளிச்சாமி (வெள்ளக்கிணர்) :- சின்னவேடம்பட்டி ஏரியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உள்ளன. அவை மாலை நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப் படுத்தி வருகின்றன. அதை தடுக்க வேண்டும். மேலும் அந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை தூர்வார வேண்டும். அங்கு மீண்டும் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயபிரகாஷ் (கணுவாய்) :- தடாகம், கணுவாய் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் யானைகள் அதிகமாக உள்ளன. எனவே அதை யானைகள் வாழ்விட வெளிப்புற பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இதுதவிர விவசாயிகள் பேசும்போது, வனப்பகுதியை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும். காட்டு யானைகள், மயில்கள், காட்டுப்பன்றிகள் தொல்லையில் இருந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பதில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.