செம்மஞ்சேரி பகுதியில் ரூ.165 கோடியில் மூடுகால்வாய் அமைத்து வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு


செம்மஞ்சேரி பகுதியில் ரூ.165 கோடியில் மூடுகால்வாய் அமைத்து வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
x

செம்மஞ்சேரி பகுதியில் ரூ.165 கோடியில் மூடுகால்வாய் அமைத்து வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதால் பல ஆண்டு கால பாதிப்பு நீங்கியதாக அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை

சென்னை புறநகர் பகுதியான பெரும்பாக்கம், தாழம்பூர், அரசங்கழனி. செம்மஞ்சேரி பகுதிகள் நகரமயமாக்குதலில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த பகுதிகள் ஆகும். இந்த பகுதியில் பல அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது.

புதிதாக உருவாகியுள்ள இந்த குடியிருப்புகளில் பெரும்பாலானவை, பல ஆண்டுகளாக விளைநிலங்களாக, காலி நிலமாக இருந்த பகுதிகள்தான் தற்போது பல அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏரிகளின் உபரிநீர் இந்த காலி நிலங்களில் தேங்கி தானாகவே அருகில் பள்ளமாக இருக்கும் பகுதிகளுக்கு சென்று ஓடைகளில் கலப்பது வழக்கம்.

அப்படித்தான் வண்டலூர் காப்புக்காடுகளில் தொடங்கி அகரம்தென் ஏரிகளின் குழுமத்தில் உள்ள 25 ஏரிகள், ஒட்டியம்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள 7 ஏரிகள் என எண்ணற்ற ஏரிகளின் உபரி நீரானது காலியாக கிடந்த பட்டா நிலங்களின் வழியாக பள்ளிக்கரணை தெற்கு பகுதியில் உள்ள சதுப்பு நில காட்டில் கலந்து விடுவது வழக்கம்.

ஆனால் நகரமயமாக்கலின் விளைவாக காலி பட்டா நிலங்கள் அனைத்தும் தற்போது குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஏரி உபரிநீர் மழை காலங்களில் வழக்கமாக சென்ற பட்டா நிலங்கள் வழியாக செல்ல, அந்தப்பகுதி குடியிருப்புகளில் இணைப்பு கால்வாய் ஏதும் இல்லாததால் வெள்ளத்தில் மூழ்கி வந்தன.

டிசம்பர் மாதம் வந்தாலே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பது, போக்குவரத்து துண்டிக்கப்படுவது, படகுகள் மூலமாகவே மீட்கப்படுவது என பல துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

குறிப்பாக தாழம்பூர் டி.எல்.எப். பகுதி, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், எழில்முகன் நகர், எழில் குடியிருப்பு, ஜவகர் நகர், யாழினி குடியிருப்பு என எண்ணற்ற குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வந்தன.

100 மி.மீ. மழை பெய்தாலே இந்த பகுதிகளில் சாலைகளில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கும். 200 மி.மீ. மழை பெய்தால் 5 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்து, படகு போக்குவரத்தாக மாறும் சூழ்நிலை இருந்தது.

பல ஆண்டு காலமாக இருந்த வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினர் இங்கு ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, வெள்ள பாதிப்பின்போது களத்தில் நேரடியாக இறங்கி என்ன செய்தால் இதற்கு தீர்வு ஏற்படும்? என்பதை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மூலம் நேரில் கண்டறிந்தார். இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நீர்வள ஆதாரத்துறையினர் திட்டம் தீட்டினர். அதன்படி ரூ.165 கோடி செலவில் கான்கிரீட் மூடுகால்வாய் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டதுடன், இந்த பகுதியில் 2 முறை நேரில் வந்து ஆய்வு செய்தார்.

இதன் காரணமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பணிகள் 4 மாதத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. 4 மீட்டர் நீளத்தில் 2.1 மீட்டர் ஆழத்தில் மதுரப்பாக்கம் ஓடையில் இருந்து செம்மஞ்சேரி கால்வாய் வரை 3 கண் உடைய மூடு கால்வாயும், ஒட்டியம்பாக்கம் ஓடையில் இருந்து அரசங்கழனி வேலந்தாங்கல் ஏரி வரை 2 கண் உடைய‌ மூடு கால்வாயும், அரசங்கழனி வேலந்தாங்கல் ஏரியில் இருந்து அதே அளவில் 2 கண்உடைய மூடு கால்வாயும் என ஏரி உபரி நீர் 3 வழித்தடங்களில் இணைப்பு ஏற்படுத்தி நேரடியாக பள்ளிக்கரணை தெற்கு பகுதி சதுப்பு நிலத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசங்கழனி கால்வாய் மற்றும் செம்மஞ்சேரி கால்வாயில் இரு பக்கமும் கான்கிரீட் தாங்கு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளில் இருந்து வருகின்ற உபரி நீரானது நேரடியாக பள்ளிக்கரணை தெற்கு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்துக்கு செல்லும் வகையில் இணைப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டு தற்போது 4,000 கன அடி தண்ணீர் இந்த கால்வாய்கள் வழியாக சென்று கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு 4 மாதத்தில் தீர்வு கண்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் அதிரடி நடவடிக்கைகள் மூலம் இணைப்பு கால்வாய்களை அமைத்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதனால் டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக இந்த பகுதியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வழக்கமான சாலை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆண்டாண்டு காலமாய் டிசம்பர் மாதத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக சமுதாய நலக்கூடங்களில் வசித்த மக்கள் அனைவரும் தற்போது வீடுகளில் பாதிப்பின்றி மகிழ்ச்சியோடு வசித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக நிலவிய வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட தமிழக அரசு‌ நீர்வள ஆதாரத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story