மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்த நபர்
மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மின்கம்பத்தில் தொங்கிய உடலை போலீசார் மீட்டனர்.
மின்கம்பத்தில் தொங்கிய நிலையில்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கிராமத்தில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். 11 ஆயிரம் கே.வி. மின்திறன் கொண்ட இந்த மின்கம்பத்தில் அவரது 2 கால்களும் மின் கம்பியில் சிக்கிய நிலையில் உடல் அந்தரத்தில் தொங்கியபடி காணப்பட்டது.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மின்கம்பத்தில் அந்தரத்தில் தொங்கிய நபரின் உடலை பார்த்து பதறினர்.
போலீசார் விசாரணை
பிறகு கொக்கிலமேடு ஊராட்சி தலைவர் சாமூண்டீஸ்வரி நடராஜன் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர் சண்முகம், முதன்மை தீயணைப்பு அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மின்கம்பியில் மாட்டிய நிலையில் காணப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் குடும்பத்தகராறு காரணமாக அல்லது வேறு ஏதாவது ஒரு காரணங்களுக்காக மின் கம்பத்தில் ஏறி உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், அவரது அங்க அடையாளங்களை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.