திருப்பரங்குன்றத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்தவர் கைது
திருப்பரங்குன்றத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
நூதன முறையில்..
திருப்பரங்குன்றம் அருகே பசுமலை விநாயகா நகர் இளங்கோ குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி பத்மாவதி (வயது 70).இவர் கடந்த 1-ந்தேதி கூடல் மலையில் உள்ள மாயாண்டி சுவாமிகள் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பத்மாவதியிடம் நகையை போட்டு வந்தால் யாராவது பறித்து சென்று விடுவார்கள். பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அந்த வாலிபர் பத்மாவதியிடம் நகையை கழற்றி கொடுங்கள். பேப்பரில் வைத்து மடித்து தருகிறேன் என்று கூறி உள்ளார். உடனே அவர் அந்த வாலிபரிடம் நகையை கொடுத்துள்ளார்
வழிப்பறி கொள்ளையன் கைது
இந்த நிலையில் அந்த வாலிபர் ஒரு பேப்பரை பத்மாவதியிடம் கொடுத்து நகையை பத்திரமாக மடித்து வைத்துள்ளேன். பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பேப்பரை கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து புறப்பட்டு சென்று விட்டார். அப்போது பத்மாவதி பேப்பர் கனமாக உள்ளதே? என்று சந்தேகப்பட்டு பேப்பரை பிரித்து உள்ளார். அதில் நகைக்கு பதிலாக கல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைைமயில் தனிப்படை போலீசார் கூடல்மலைப்பகுதி கண்காணிப்பு கேமராவின் பதிவை கொண்டு சந்தேகத்தின் பேரில் பசுமலை கோபாலபுரத்தில் பதுங்கி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் மதுரை பசுமலை அடுத்த கோபாலபுரம் ஆறுமுகம் மகன் துரை என்ற மாரிமுத்து (34) என தெரிய வந்தது. மூதாட்டியிடம் நகை பறித்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.