வீட்டின் ஜன்னல் வழியாக 5 பவுன் நகை திருடியவர் கைது
வீட்டில் ஜன்னல் வழியாக 5 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:-
சேலம் 5 ரோடு ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகள் பூரணி (வயது 24). இவர் கடந்த 26-ந் தேதி இரவு பூரணி தூங்குவதற்கு முன்பாக தான் அணிந்திருந்த 3 பவுன் வளையல், 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அறையின் ஜன்னல் அருகே உள்ள டிரசிங் டேபிள் மேல் வைத்தார். அந்த டேபிளில் செல்போன் ஒன்றும் இருந்தது. மறுநாள் காலை அவர் எழுந்து பார்த்த போது, வளையல், நகை உள்பட 5 பவுன் நகைகள் மற்றும் செல்போன் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பூரணியின் தந்தை சூரமங்கலம் போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை மற்றும் செல்போனை திருடிச்சென்றது, சேலம் அரிசிபாளையம் முல்லாக்காடு பகுதியை சேர்ந்த கிச்சா என்கின்ற பிரபு (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், திருட்டு போன வளையல், நகைகள் மற்றும் செல்போனை மீட்டனர்.