தரமான வீடுகள் கட்டித்தர கோரி நரிக்குறவர்கள் மனு
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தரமான வீடுகள் கட்டித்தரக்கோரி நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.
நரிக்குறவர்கள் மனு
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கினார். புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் நரிக்குறவர்கள் காலனியில் வசிக்கும் நரிக்குறவர்கள் தாங்கள் விற்கும் பாசி, மாலையுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
மனு குறித்து அவர்கள் கூறுகையில், ''எங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை வந்த போது ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் 60 பேரில் 48 பேருக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அஸ்திவாரம் தோண்டப்பட்டு அதன்மேல் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இதில் சுவர்கள் கட்டப்பட்டு வருகிற நிலையில் அவை கீழே விழுந்தன. அவை தரமானதாக இல்லாததால் செங்கல்கள் கீழே விழுந்தன. எனவே தரமான வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க வந்துள்ளோம். ஒப்பந்தம் எடுத்து வீடுகள் கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் நல்ல தரமான வீடுகளை எங்களுக்கு கட்டித்தர வேண்டும்'' என்றனர்.
இதற்கிடையில் மனு அளிக்க வந்தவர்களில் ஒருவர் தலையில் மண்சட்டியில் செங்கல்களை சுமந்து தரையில் அமர்ந்தப்படி கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரித்து, நரிக்குறவர்களை மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அனுமதித்தனர்.
இதேபோல புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைகளுக்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் கமிஷன் தொகை கேட்பதாகவும், இதனை போக்கி வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். கந்தர்வகோட்டையை சேர்ந்த கற்பகம் என்பவர் தனது கணவர் சின்னையா பார்வையற்றவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை கோரி மனு அளித்தார்.
பொது நிவாரண நிதி
கூட்டத்தில் மொத்தம் 400 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தேக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் அறந்தாங்கி வட்டம், மூக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகிய 2 நபர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசேலைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,600 வீதம் ரூ.33 ஆயிரம் மதிப்புடைய விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க மதுப்பிரியர்கள் கோரிக்கை
புதுக்கோட்டையில் பழனியப்பா முக்கம் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகேயும், பள்ளி அருகேயும் அமைந்திருந்ததால் மதுப்பிரியர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை வருவாய்த்துறையினரால் பூட்டப்பட்டது. மேலும் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் பூட்டப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை அதே இடத்தில் திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் புதுக்கோட்டை வடக்கு 2,3,4 வீதி, மாப்பிள்ளையார்குளம், நரிமேடு, மச்சுவாடி மதுப்பிரியர்கள், கூலித்தொழிலாளர்கள் என குறிப்பிட்டு, பழனியப்பா கார்னரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் காலம் தொட்டு மற்றும் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. தற்போது 15 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு கிடக்கிறது. அந்த கடை இல்லாமல் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. கட்டிட வேலைகள் பார்த்து விட்டு பழனியப்பா கார்னரில் அருகில் உள்ள கடையில் மதுபானம் வாங்கி செல்வதற்கு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே அந்த இடத்தில் டாஸ்மாக் கடை இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். போராட்டத்தினால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மதுப்பிரியர்கள் மீண்டும் திறக்க வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.