மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முன்னோடி திட்டம்


மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முன்னோடி திட்டம்
x

மகளின் உரிமைத்தொகை திட்டம் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முன்னோடி திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பாராட்டினார்.

விருதுநகர்


மகளின் உரிமைத்தொகை திட்டம் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முன்னோடி திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டினார்.

குடியிருப்புகள் அகற்றம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

சிவகாசி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொத்துமரத்து ஊருணி மற்றும் பிச்சாண்டி தெரு பகுதியில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் வசித்து வரும் 150 ஏழை, எளிய குடும்பத்தினரின் குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு 30 கி.மீ. தூரத்தில் மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட அந்த பகுதியை சேர்ந்த 50 பெண்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நானும் கலெக்டரை சந்தித்து இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தேன். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அதேபகுதியில் 15 தனியார் கட்டிடங்கள், பஸ் நிறுத்தும்இடம், கல்லறை வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகம் உள்ளிட்டவை அகற்றப்படாமல் இருக்கும் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் எடுத்துக் கூறப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

பாராட்டு

அதேபோல அருப்புக்கோட்டை நார்த்தம்பட்டியில் சுடுகாடு செல்லும் பாதை அமைத்து தரவும் வலியுறுத்தினேன். பிரேமலதா விஜயகாந்த் பெண்மணி என்ற முறையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். மகளிர் உரிமை திட்டம் என்பது வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் உரிமை தொகை என்று முதல்-அமைச்சர் வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது.

இனி இந்த திட்டத்தை வருங்கால ஆட்சியாளர்களால் கைவிட முடியாது. இந்த திட்டம் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய முன்னோடி திட்டம் ஆகும். இந்த திட்டத்தை நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கின்றேன்.

விலை உயர்வு

இந்தியா கூட்டணி அமைந்ததில் இருந்து பிரதமர் மோடி பதற்றப்படுகிறார். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். சிதறடிக்க வேண்டும் என்ற முறையில் பேசி வருகிறார். பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் இந்தியா கூட்டணியின் நோக்கமாகும். ஆவின் பால் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story