கஞ்சா இல்லாத தாலுகாவாக ஆனைமலையை மாற்ற திட்டம்


கஞ்சா இல்லாத தாலுகாவாக ஆனைமலையை மாற்ற திட்டம்
x

கஞ்சா இல்லாத தாலுகாவாக ஆனைமலையை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் கிராமம், கிராமமாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கஞ்சா இல்லாத தாலுகாவாக ஆனைமலையை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் கிராமம், கிராமமாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுகாவை கஞ்சா இல்லாத தாலுகாவாக மாற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் உத்தரவின் பேரில் கிராமங்களில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் ஒவ்வொரு கிராமமாக சென்று ஆனைமலை நெல்லிகுத்துப்பாறை, முக்கோணம், மாசாணியம்மன் கோவில் அருகில், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம், சேத்துமடை, ஒடையகுளம், செமனாம்பதி, மீனாட்சிபுரம், அம்பராம்பாளையம் சுங்கம், அம்பராம்பாளையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பலகையை வைத்து உள்ளனர். அதில் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் 9498212633 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு

கஞ்சா அதிகமாக விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளில் கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறப்படுகிறது. போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க பெற்றோர்கள் மாணவர்களை பாதுகாக்க வேண்டும். திருப்பூர் மாவட்ம் மற்றும் கேரள எல்லையை கடந்துதான் கஞ்சா வருகிறது.

எனவே மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இதுவரைக்கும் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமலை தாலுகாவை கஞ்சா இல்லாத தாலுகாவாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story