ஏ.டி.எம்.மில் 3 மடங்கு பணம் கொட்டியதால் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி


ஏ.டி.எம்.மில் 3 மடங்கு பணம் கொட்டியதால் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி
x
தினத்தந்தி 8 July 2023 6:34 PM GMT (Updated: 9 July 2023 7:22 AM GMT)

குடியாத்தத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மையத்தில் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வந்ததால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மையத்தில் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வந்ததால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் பணம் எடுக்க வந்ததால் தொழில்நுட்ப கோளாறை உணர்ந்த அதிகாரிகள் அந்த மையத்தை மூடினர்.

ஏ.டி.எம்.மையம்

குடியாத்தம் டவுன் காட்பாடிரோடு நான்குமுனை சந்திப்பு அருகே ஸ்டேட் வங்கி ஏ,டி,எம்.மையம் உள்ளது.

கடந்த 2 நாட்களாக அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள இரண்டு எந்திரங்களில் ஒன்று பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் நேற்று பழுதான ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்து அதில் பணத்தை நிரப்பி சென்றுள்ளனர்.

நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள 2 எந்திரங்களில் ஒரு எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை பொருத்தி ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தவருக்கு ஆறு 500 ரூபாய் நோட்டுகள், அதாவது ரூ.3 ஆயிரம் வந்துள்ளது.

மேலும் செல்போனுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அந்த ஏ.டி.எம். மையத்தில் ஏராளமானோர் பணம் எடுத்துள்ளனர். அனைவருக்கும் ஆயிரம் ரூபாய்க்கு பதில் 3 ஆயிரம் ரூபாயாக 3 மடங்கு பணம் கொட்டியது.

அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்படவே அவர்களும் அந்த ஏ.டி.எம். மையத்தில் ஆயிரம் ரூபாய் எடுத்ததற்கு 3 ஆயிரம் ரூபாய் வந்திருக்கிறது.இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள் உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆய்வு

இதனை தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், ஏட்டுக்கள் உசேன், மோசஸ் மற்றும் ஸ்டேட் வங்கியின் குடியாத்தம் கிளை முதன்மை மேலாளர் சந்திரகாந்த், உதவி மேலாளர் பிரவீன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

வங்கி அதிகாரிகள் அதில் ஏடிஎம் கார்டை பொருத்தி அவர்கள் பணம் எடுத்ததற்கும் ஆயிரம் ரூபாய்க்கு 3 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் முன்னிலையில் அந்த ஏ.டி.எம். மையத்தை பூட்டினர். அதற்குள் ரூ.3 ஆயிரம் எடுக்கலாம் என்ற மகிழ்ச்சியுடன் ஏராளமானோர் அங்கு குவிந்தனர் அவர்களிடம் போலீசார், எந்திரம் பழுதாகியுள்ளது என்று கூறி வேறு ஏ.டி.எம். மையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

காரணம் என்ன?

தொடர்ந்து ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் சந்திரகாந்த் கூறியதாவது:

ஏ.டி.எம் மையத்தில் உள்ள 2 எந்திரங்களில் ஒரு எந்திரத்தில் பணம் நிரப்பப்பட்டுள்ளது. அதில் 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைத்துள்ளதாக தெரிய வருகிறது. ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தவர்களுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுகளும் தான் வர வேண்டும். ஆனால் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் ஆயிரம் ரூபாய்க்கு ஆறு நோட்டுகள் என மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

இந்த பணத்தை நாங்கள் மீட்டு விட முடியும். பணம் எடுத்த வர்களுடைய வங்கி கணக்கு விவரங்களை கணினி மூலம் எடுக்கப்பட்டு அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story