மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பிளம்பர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பிளம்பர் பலி
x

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பிளம்பர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பிளம்பர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மீனவன்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). தேவநல்லூரை சேர்ந்தவர் முப்பிடாதி (26). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பிளம்பராக உள்ளனர். வழக்கமாக 2 பேரும் சேர்ந்து தான் வேலைக்கு செல்வார்கள்.

அதேபோல் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்காக ரமேஷ், முப்பிடாதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வேலை முடிந்த பின்னர் நேற்று இரவு அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

பிளம்பர் பலி

மோட்டார் சைக்கிளை முப்பிடாதி ஓட்டினார். ரமேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் நெல்லை அருகே கங்கைகொண்டான் விலக்கு பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது நெல்லையை நோக்கி ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முப்பிடாதி படுகாயம் அடைந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முப்பிடாதியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story