ஓட்டை, உடைசலான அரசு பஸ்
பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் ஓட்டை, உடைசலான அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இருந்து, வேடசந்தூர் வழியாக கோவைக்கு அரசு பஸ் நேற்று காலை புறப்பட்டது. எரியோட்டில் அந்த பஸ் நின்றபோது, அதில் பயணிகள் ஏறினர். அப்போது இருக்கை அருகே ராட்சத ஓட்டை ஒன்று கிடந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இந்த ஓட்டை உள்ளது. அதனை பயணிகள், தங்களது செல்போனில் படம் எடுத்தனர். அதன் வழியாக சிறு குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்த பஸ் வேடசந்தூர் பஸ் நிலையத்துக்கு வந்து நின்றது. பஸ்சில் ஓட்டை இருந்தது குறித்து டிரைவர், கண்டக்டர் வேடசந்தூர் பணிமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, அதில் பயணிகள் ஏற்றப்பட்டு வேடசந்தூரில் இருந்து கோவை நோக்கி பஸ் புறப்பட்டு சென்றது. பயணிகளின் நலன் கருதி ஓட்டை, உடைசலான பஸ்கள் இயக்குவதை அரசு போக்குவரத்து கழகம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.