பொக்லைன் எந்திரம் மீது மின் கம்பம் சாய்ந்தது


பொக்லைன் எந்திரம் மீது மின் கம்பம் சாய்ந்தது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

பாதாள சாக்கடை பணியின்போது பொக்லைன் எந்திரம் மீது மின் கம்பம் சாய்ந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தில் உள்ள மயிலம் ரோடு, இந்திரா நகர் பகுதியில் கடந்த இரு வாரங்களாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பாதாள சாக்கடை தொட்டிகளில் வீட்டு கழிவு நீர் குழாய் இணைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரத்தின் முன்பகுதி அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதில் மின் கம்பம் உடைந்து பொக்லைன் எந்திரத்தின் மீது சாய்ந்தது. அப்போது பொக்லைன் எந்திரத்தின் உள்ளே சிக்கிய டிரைவர் தர்மபுரி பகுதியை சேர்ந்த குணா இரும்பு பகுதியை தொடாதவாறு அசையாமல் இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைப்பார்த்து 32-வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதை அடுத்து பொக்லைன் எந்திரத்தில் சிக்கிய டிரைவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் உடைந்த மின் கம்பத்தை உடனடியாக சீர் செய்ய அதிகாரிகளை பொது மக்கள் அறிவுறுத்தியதால் உடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைத்த பின்னர் மீண்டும் அந்த பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மின்கம்பத்தை சேதப்படுத்தியதால் புதிய மின் கம்பம் நடுவதற்கு ரூ.7,500 கட்டணத்தை பாதாள சாக்கடை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மின்சார வாரியத்துக்கு செலுத்தினார்.


Next Story