மனைவியை கத்தியால் குத்திய விசைத்தறி தொழிலாளி போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியை கத்தியால் குத்திய விசைத்தறி தொழிலாளி போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை
x

எடப்பாடி அருகே மனைவியை கத்தியால் குத்திய விசைத்தறி தொழிலாளி, போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

எடப்பாடி:

விசைத்தறி தொழிலாளி

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி ஊராட்சி, வேப்பமரத்தூரை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது 60), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி கந்தாயி. இவர் அப்பகுதியில் உள்ள சத்துணவு கூடத்தில் சமையலராக பணி செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். சின்ன முத்துவுக்கும், அவரது மனைவி கந்தாயிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கந்தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சின்னமுத்து ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கந்தாயியை குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கந்தாயியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கத்திக்குத்து காயத்துடன் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரி அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையறிந்த சின்னமுத்து அடுத்த கட்டமாக போலீசார் தன்னிடம் விசாரணை மேற்கொள்ள கூடும் என்று பயந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று, சின்னமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கத்தியால் குத்திய நிலையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இருப்பாளி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story