சிறைச்சாலை தண்டனை கூடம் அல்ல ஞானம் தரக்கூடியது
சிறைச்சாலை என்பது தண்டனை கூடம் அல்ல ஞானம் தரக்கூடியது என்று வேலூர் மத்திய சிறையில் எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
சிறைச்சாலை என்பது தண்டனை கூடம் அல்ல ஞானம் தரக்கூடியது என்று வேலூர் மத்திய சிறையில் எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
எழுத்தறிவு திட்டம்
வேலூர் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு எழுத்தறிவை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சிறைத்துறை சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி இன்று தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணாதுரை
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
இந்த வேலூர் சிறையில் நானும், என்னுடன் சேர்ந்த 189 பேரும் மிசா கைதிகளாக இருந்தோம். எனவே இங்கு மலரும் நினைவுகளுடன் நுழைகிறேன். மேலும் 47 வருடங்களுக்கு பின்னர் இந்த சிறைக்கு வந்துள்ளேன்.
வேலூர் சிறை மிகவும் ராயலான சிறை. இந்த சிறைக்கு இணையாக வேறு சிறை எதுவும் கிடையாது. பெரிய அளவிலான நூலகமும், நல்ல காற்றோட்டத்துடன் கூடிய மருத்துவமனையும் இங்கு இருந்தது.
மேலும் மிகப்பெரிய நூலகங்களில் காணமுடியாத நூல்கள் கூட இங்கு கிடைக்கும். இந்த சிறையில் உள்ள எல்லா புத்தகங்களிலும் சி.என்.அண்ணாதுரை என்று இருக்கும். ஏனெனில் அவர் 3 மாதங்கள் இங்கு இருந்தார்.
எல்லா புத்தகங்களையும் படித்துள்ளார். நாங்கள் சென்றால் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அதை படித்தாயா? என்று கேட்பார். வேலூர் சிறையின் நூலகம் என்பது மிகப்பெரிய பொக்கிஷம்.
ஞானம் தரக்கூடியது
கைதிகளாக இருப்பவர்களும் மனிதர்கள்தான். ஒரு கண நேர கோபம்தான் தவறு செய்ய காரணமாக இருக்கிறது. எனவே அதனை இங்கு திருத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஒருவர் சிறையில் 3 மாதம் இருந்தால்தான் உலகம் அவர்களுக்கு தெரியும். சிறைச்சாலை என்பது தண்டனை தரக்கூடிய கூடம் அல்ல. அது ஞானம் தரக்கூடியது. 47 வருடங்களுக்கு பிறகு நான் குடியிருந்த கோவிலை பார்க்க வந்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
மனம் உறுதிபெறும்
வேலூர் மத்திய சிறை உள்பட 8 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சிறைகளில் 1,728 பேருக்கு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறை கைதிகளின் வாழ்கை தரத்தை உயர்த்த எழுத்தறிவு திட்டம் கொண்டு வந்துள்ளோம். நோயாளிகளை பார்க்க செல்லும் போது பழம் வாங்கி செல்வது போன்று சிறைக் கைதிகளை சந்திக்க புத்தகம் கொண்டு வந்துள்ளோம். புத்தகத்தை வாசித்தால் உலகை அறிந்து கொள்ளலாம். எண்ணும் எழுத்தும் பயிற்சி மூலம் உங்கள் மனமும் உறுதி பெறும். வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கற்றல் கையேடுகளை வழங்கினார்.