நெல்லிக்குப்பத்தில் பரபரப்புகட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதிய தனியார் பஸ்தொடர் விபத்துக்களை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


நெல்லிக்குப்பத்தில் பரபரப்புகட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதிய தனியார் பஸ்தொடர் விபத்துக்களை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் டிராக்டர் மீது மோதியது.இந்நிலையில் தொடர் விபத்துக்களை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


நெல்லிக்குப்பம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் நெல்லிக்குப்பம் வாழப்பட்டு பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து டிரைவர், பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்த முயன்றார்.

ஆனால், பஸ் நிற்காமல் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அபயகுரல் எழுப்பினர்.

இதனிடையே அதிவேகமாக பஸ் மோதியதால் டிராக்டர் சுமார் 50 மீட்டர் தூரம் முன்னோக்கி சென்று நின்றது. இதில் டிராக்டர் அருகே நின்ற 2 பேர் காயமடைந்தனர். மேலும், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

சாலை மறியல்

தொடர்ந்து அப்பகுதி மக்கள், தனியார் பஸ் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்துக்களை தடுக்கவும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறி, பொதுமக்கள் சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த சில நாட்களில் மட்டும் இப்பகுதியில் 6 விபத்துக்கள் நடந்துள்ளது. இதை தடுக்க வேகத்தடை அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வேகத்தடை அமைத்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story