சரக்கு வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
சரக்கு வேன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு: கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மகன் குருபிரசாத்(வயது 22). இவர், பொள்ளாச்சியில் உள்ள மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த் நிலையில் குருபிரசாத், வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை தாமரைக்குளம் பகுதியில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வேன், குரு பிரசாத் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட குருபிரசாத்துக்கு தலை மற்றும் தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குருபிரசாத் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=================