விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 14 Jun 2023 7:12 PM GMT (Updated: 15 Jun 2023 10:04 AM GMT)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

வேலூர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

தனியார் நிறுவன ஊழியர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தாவனம்பள்ளிமோண்டல் பகுதியை சேர்ந்தவர் ஆணைமலை ஆனந்த் (வயது 24). இவர் சித்தூரில் உள்ள தனியார் பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 12-ந்தேதி ஆனந்த் மோட்டார் சைக்கிளில் பங்காருபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து ஆனந்த் குடும்பத்தினருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய மனைவி சிருஷ்யா தனது கணவர் ஆனந்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக கூறினார்.

உடல் உறுப்புகள் தானம்

அதைத்தொடர்ந்து உடனடியாக அவருடைய உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை சிம்ஸ் மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன. கண்கள் மட்டும் தானமாக வழங்கப்படவில்லை.

தானமாக பெறப்பட்ட உடல்உறுப்புகள் அதற்காக பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூளைச்சாவு அடைந்த ஆனந்துக்கு, தன்ஷி பிரியா, கீர்த்தி பிரியா என்று 2 மகன்களும், விஷால் என்ற மகனும் உள்ளனர்.


Next Story