தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி கத்திக்குத்து
திருமணமான பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால், தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி கத்தியால் குத்திய அந்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் கைது ெசய்யப்பட்டனர்.
கோவை
திருமணமான பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால், தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி கத்தியால் குத்திய அந்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் கைது ெசய்யப்பட்டனர்.
பெண்ணுடன் பழக்கம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் சோனைமுத்து(வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். சோனைமுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் கடன் பிரிவு மேலாளராக வேலை பார்த்தார்.
அப்போது அவருக்கு, அதே வங்கியில் ஊழியராக வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நட்பாக பழகி வந்தனர். பின்னர் சோனைமுத்து அந்த பணியை விட்டுவிட்டு மற்றொரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக சேர்ந்தார்.
செல்போனில் பேச்சு
இதற்கிடையில் வங்கியில் பணியாற்றியபோது அவருடன் நட்பாக பழகிய பெண், சுகுணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ்(23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அதன்பிறகும் சோனைமுத்து, அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். இது சல்மான் பாரிசுக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரம் அடைந்த அவர், சோனைமுத்துவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.
அதன்படி சம்பவத்தன்று சோனைமுத்து ஆனைகட்டி சென்று விட்டு கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட சல்மான் பாரிஸ், 'உங்களிடம் பேச வேண்டும், வ.உ.சி. பூங்காவுக்கு வாருங்கள்' என்று அழைத்தார். இதை ஏற்று அங்கு சோனைமுத்து சென்றார்.
கத்திக்குத்து
அப்போது சல்மான் பாரிஸ் தனது நண்பர்களான மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்த அக்பர் சாதிக், கோட்டைமேட்டை சேர்ந்த முகமது அஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து, அவரிடம் தனது மனைவியுடன் செல்போனில் பேசுவது குறித்து கேட்டு கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் பாரிஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி சோனைமுத்துவை காரில் ஏற்றி கடத்தி சென்றார். தொடர்ந்து ஓடும் காரில் சோனைமுத்துவை தகாத வார்த்தையில் பேசி கத்தியால் குத்தியதாக தெரிகிறது. ஆத்துப்பாலம் சிக்னலில் சென்றபோது பெட்ரோல் இல்லாமல் கார் நின்றது. அப்போது கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சோனைமுத்து, வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டு காரில் இருந்து இறங்கினார்.
கைது
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சல்மான் பாரிஸ் தனது நண்பர்களுடன் தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சல்மான் பாரிஸ், அக்பர் சாதிக், முகமது அஸ்கர் ஆகியோரை கைது செய்தனர்.