15 தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்


15 தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
x

கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன்மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டுவரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 937 மாணவ-மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது குறித்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

குடும்பசூழல்

தமிழக முதல்-அமைச்சர் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், நகர மற்றும் கிராம பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையிலேயே பள்ளிக்கு சென்று விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்லாமல் சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக அமைகிறது.

எனவே முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்கப்படும். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.

15 பள்ளிகளில்...

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளில் உள்ள 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 937 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை மிகச்சிறப்புடன் மேற்கொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சரவணபவா, கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story