செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வாணியம்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட முஸ்லிம்பூர் கே.கே.தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணிடம்பாடி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
வாணியம்பாடியில் ஏற்கனவே பெருமாள் பேட்டை, அம்பாலால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.