மின் கட்டண உயர்வை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி


மின் கட்டண உயர்வை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
x

மின் கட்டண உயர்வை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் நரிக்குறவர் சமுதாயத்தினரை எஸ்.டி. பட்டியலில் சேர்க்கவும், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் ஏற்படுத்தவும் வலியுறுத்துவேன். டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது. பல இடங்களில் இன்னமும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிப்படைந்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை அடுத்த பரந்தூர் புதிய விமான நிலையம் திட்டத்தை உள்ளூர் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இன்னமும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யாமலிருப்பது தமிழக அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கொரோனாவுக்கு பிறகு வளர்ந்த நாடுகளே பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள நிலையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பாராட்டத்தக்கது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அலங்காரம் தேவையில்லை, ஆக்கப்பூர்வமான உள் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மக்களுக்கு மிகவும் தேவையான இலவசங்களை மட்டும் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும். மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும். தவறினால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விரைவில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் அரசாக தமிழக அரசு இருக்கிறது, என்றார். பேட்டியின் போது கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story