மீன்வலையில் சிக்கிய மலைப்பாம்பு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீன்வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் வலை விரித்து மீன்கள் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்தை ஒட்டி உள்ள தாமிரபரணி ஆற்றில் மீன் வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த ஊரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் வலையை விரித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை செல்லப்பாண்டி வலையில் சிக்கி இருக்கும் மீன்களை பிடிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார்.
வலையை ஆற்றுக்குள் இருந்து மெதுவாக வெளியே இழுத்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த வலைக்குள் 7 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை கால்நடை ஆய்வாளர் அர்னால்டு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முருகன், பூல்கணேசன் ஆகியோர் உடனடியாக மணப்படை வீட்டுக்கு சென்றனர். அங்கு வலையை அறுத்து எடுத்து மலைப்பாம்பை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.