ஏரியில் மீன்பிடிக்க கட்டிய வலையில் சிக்கிய மலைப்பாம்பு

ஏரியில் மீன்பிடிக்க கட்டிய வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
10 அடி நீள மலைப்பாம்பு
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி பெரிய ஏரியில் மீன்பிடிப்பதற்காக சிலர் வலை கட்டியிருந்தனர். அந்த வலையில் மீன்கள் சிக்கியுள்ளதா? என்பதை அறிய நேற்று வலையை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு அச்சம் அடைந்தனர்.
இது குறித்து அவர்கள், பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பெரம்பலூர் வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் உடனடியாக ஆலம்பாடிக்கு சென்றனர். மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு தப்பிக்க வழியின்றி, வலை நரம்புகளுடன் பிண்ணியிருந்தது. இதையடுத்து மலைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
காட்டில் விடப்பட்டது
இதையடுத்து அந்த மலைப்பாம்பை பெரம்பலூர் மாவட்ட மேற்கு எல்லையான பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடபுரம் பகுதியில் விடுவதற்காக வனத்துறையின் கொண்டு சென்றனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வனக்காட்டில் விடப்பட்டது. மீன்பிடிப்பதற்காக கட்டப்பட்ட வலையில் மலைப்பாம்பு சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.