டிக்கெட் கவுண்ட்டர் இல்லாத ரெயில் நிலையம்


டிக்கெட் கவுண்ட்டர் இல்லாத ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

ரெயில் நிலையம்

கோவை சிங்காநல்லூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் மட்டும் நின்று செல்லும். அதன்படி கோவை-நாகர்கோவில் ரெயில், கோவை-திருச்சி ரெயில், கோவை-ஈரோடு ரெயில், கோவை-சேலம் ரெயில் ஆகிய பயணிகள் ரெயில் இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதற்காக சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைக்கப்பட்டு, அங்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, டிக்கெட்டும் கொடுத்து வந்தார். ஆனால் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் டிக்கெட் கொடுக்கும் கவுண்ட்டர் மூடப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை அது திறக்கப்படவில்லை.

பயன்படுத்த முடியாத நிலை

இதன் காரணமாக சிங்காநல்லூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயணிகள் ரெயிலில் பயணிக்க கோவை அல்லது வடகோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினையை தவிர்க்கதான் ஆங்காங்கே ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் சிங்காநல்லூரில் ரெயில் நிலையம் இருந்தும் அங்கு டிக்கெட் வழங்கப்படாததால் அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைதான் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் மற்றும் பயணிகள் கூறியதாவது:-

வேறு பகுதிக்கு செல்லும் பயணிகள்

சிங்காநல்லூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காகதான் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் வழியாக காலை 7.40-க்கு வரும் நாகர்கோவில் ரெயில், 8.20-க்கு வரும் திருச்சி ரெயில், 9 மணிக்கு வரும் ஈரோடு ரெயில், 10.30 மணிக்கு வரும சேலம் ரெயில் ஆகிய 4 ரெயில்களும் நின்று செல்கின்றன.

அதுபோன்று இந்த ரெயில்கள் திரும்பி கோவை வரும்போதும் நின்று செல்கின்றன. இதனால் இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். தற்போது டிக்கெட் கவுண்ட்டர் மூடப்பட்டதால் அவர்கள் பீளமேடுக்கோ அல்லது வடகோவைக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

நடவடிக்கை

அருகிலேயே ரெயில் நிலையத்தை வைத்துக்கொண்டு, டிக்கெட் எடுக்க வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இங்கு ரெயில் செல்லும் நேரத்தில் டிக்கெட் கவுண்ட்டரை திறந்து டிக்கெட் கொடுத்தால் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story