காட்டில் இறக்கைகள் உடைந்து தவித்த அரியவகை கழுகு


காட்டில் இறக்கைகள் உடைந்து தவித்த அரியவகை கழுகு
x

காட்டில் இறக்கைகள் உடைந்து தவித்த அரியவகை கழுகு மீட்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையத்தை அடுத்துள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் அரிய வகை கழுகு ஒன்று இறக்கைகளில் அடிபட்டு உடைந்த நிலையில் பறக்க முடியாமல் அவதிப்பட்டு தரையில் கிடந்தது. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், அந்த கழுகை மீட்டனர். இதையடுத்து கால்நடை மருத்துவரை வரவழைத்து கழுகுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த கழுகை அரியலூர் அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் கொண்டு சென்று விட்டனர். அந்த கழுகின் இறக்கைகளில் பாதி வெள்ளையாகவும், பாதி பழுப்பு நிறத்திலும் இருந்தன. அதேபோல் அதன் அலகில் பாதி வெள்ளையாகவும், பாதி பழுப்பு நிறத்திலும் இருந்தது. இறக்கை அருகே காயம் இருந்தது. இந்த கழுகு சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை வனப்பகுதியில் தங்கியிருந்து கரைவெட்டி பகுதிக்கு பறந்து சென்றிருக்கக்கூடும். அப்போது இப்பகுதியில் உள்ள பருந்துகளோ, வேறு ஏதாவது ஒரு பறவையோ அந்த கழுகை தாக்கி இருக்கலாம், அதனால் இறக்கை அருகே காயம் அடைந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.


Next Story