பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சி
பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே காரைக்குறிச்சியில் சவுந்தரநாயகி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பு அம்சமாகும். இதில் சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்கத் திருமேனி மீது சூரிய கதிர்கள் விழும். தொடர்ந்து 5 நாட்கள் லிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் விழும். சூரியன் கதிர்களை பாய்ச்சி லிங்கத்தை வழிபடுவதாக பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 20-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது பட்டது. அடுத்த நாள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. நேற்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த 5 நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் படர்ந்தது. அப்போது லிங்கத் திருமேனி தங்கத்தை உருக்கி ஊற்றியது போல் தகதகவென மின்னியது. இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். பின்னர் சூரிய பகவானுக்கும், பசுபதீஸ்வரர், சவுந்தரநாயகி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மங்கல ஆரத்தி செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.