ஆ.ராசா உருவ படம் அவமதிப்பு
கொடைக்கானலில், ஆ.ராசா உருவ படம் அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் ஆ.ராசா. இவர், சமீபத்தில் இந்து மதத்தினரை பற்றி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாரதீய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில், ஆ.ராசா உருவ படத்தை வைத்து அதற்கு செருப்பு மாலை அணிவித்து, மர்ம நபர்கள் சிலர் அவமதிப்பு செய்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள், அவமதிக்கப்பட்ட ஆ.ராசாவின் உருவ படம் அகற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, ஆ.ராசா உருவ படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.