மீண்டும் உயர்த்தப்படும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம்


மீண்டும் உயர்த்தப்படும் பேச்சிப்பாறை  அணையின் நீர்மட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

குமரியில் மழை பொலிவு இல்லாததால், மீண்டும் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டு, 44 அடியை நெருங்கி உள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரியில் மழை பொலிவு இல்லாததால், மீண்டும் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டு, 44 அடியை நெருங்கி உள்ளது.

மழை பொலிவு இல்லை

குமரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாத தொடக்கம் வரை தொடரந்து கன மழை பெய்தது. இதனால் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளிலிருந்து 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் அணைகளின் நீர்மட்டம் கட்டுப்பாடான அளவிலேயே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை 42 அடியிலும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டத்தை 70 அடியாகவும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மழை பொலிவு இல்லாததால் அணைகளுக்கு உள்வரத்தாக வரும் நீர் மூலம் அணைகளின் நீர்மட்டம் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை அணை

இதன் மூலம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியை நெருங்கி வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 656 கன அடி நீர் உள்வரத்தாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாசனக் கால்வாயில் வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் மழை போலிவு இல்லாத நிலையில் அணைகளின் மறுகால் மதகுகள் மூடப்பட்டுள்ளதுடன், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு உள்ளே வரும் ஆறுகளில் மிதமான அளவுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இது போன்று கோதையாறு மின்நிலையங்களிலிருந்தும் தண்ணீர் வருகிறது. தற்போது பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இது போன்று பெருஞ்சாணி அணையிலிருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மேலும் அதிகம் தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.

மலையோர பகுதிகளில் கடும் குளிர்

குமரி மாவட்டத்தில் பொதுவாக கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே கடும் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவும். குறிப்பாக மலையோரப் பகுதிகளில் பனிமூட்டமும், குளிரும் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் மலையோரப் பகுதிகளில் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவுகிறது.

குறிப்பாக அதிகாலை வேளைகளில் ரப்பர் காடுகளில் பால்வடிப்புக்குச் செல்லும் தொழிலாளர்கள் குளிரின் காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதைப் போன்று பேச்சிப்பாறை, ஆறுகாணி, கோதையாறு, கீரிப்பாறை, உள்ளிட்ட தடங்களில் அதிகாலையில் பஸ்களை இயக்கும் டிரைவர்கள் குளிரில் நடுங்கிய வண்ணம் ஓட்டுவதை காணமுடிகிறது.


Next Story