300 கிலோ முருங்கைக்காய் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ரூ.120


300 கிலோ முருங்கைக்காய் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ரூ.120
x

300 கிலோ முருங்கைக்காய் வெறும் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர்

போடிப்பட்டி

300 கிலோ முருங்கைக்காய் வெறும் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சவால்கள்

விவசாயத்துக்கான இடுபொருட்கள், கூலி உள்ளிட்டவற்றுக்கான செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.அதேநேரத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை கூலி ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட சவால்களையும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு மேல் விற்கப்பட்டது. இதனால் சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியது போல சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளியை ரூ 5 க்கும் குறைவாகவே விற்பனை செய்யும் நிலை உள்ளது.இதனால் வேதனையடையும் விவசாயிகள் தக்காளியை ரோட்டோரங்களில் வீசிச்செல்லும் அவலம் அரங்கேறுகிறது. ஆனால் அதுபற்றி பேசவோ, பிரச்சினைக்கு தீர்வு காணவோ யாரும் சிந்திக்கவில்லை என்பது விவசாயிகளின் வேதனைக் குரலாக உள்ளது. இந்த நிலையில் தக்காளியைப் போலவே முருங்கைக்காய் விலையும் தொடர்ந்து குறைந்துள்ளது விவசாயிகளை வேதனையடையச்செய்துள்ளது.

மாற்றுத்தொழில்

ஒரு மொத்த விற்பனைக்கடையில் 298 கிலோ முருங்கைக்காயை 5 பைகளில் கொண்டு சென்ற விவசாயிக்கு வெறும் ரூ 120 மட்டுமே வழங்கப்பட்ட ரசீதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விவசாயிகளின் அவல நிலை குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 298 கிலோ முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயியிடம் ஒரு கிலோ ரூ.2.50-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்த விற்பனையாளருக்கு கமிஷன் தொகையாக ரூ.74.50,கூலி ரூ.50 மற்றும் வண்டி வாடகையாக ரூ.500 கழித்துக்கொண்டு வெறும் ரூ.120 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அந்த விவசாயியின் நிலையை நினைத்துப் பாருங்கள்.இந்த ரூ.120 ஐ அவர் பறி கூலிக்குக் கூட கொடுக்க முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலவே இந்த ரசீது உள்ளது.இந்தநிலையிலேயே பெரும்பாலான விவசாயிகள் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் அனைவரும் மாற்றுத் தொழில் தேடி போகும் நிலை உருவாகி விடும்.உணவு உற்பத்தித் தொழில் முடங்கி விட்டால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.எனவே விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். உற்பத்தி அதிகமாகி வரத்து அதிகரிக்கும் போது மதிப்புக்கூட்டுதல் மூலம் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.



Next Story