ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்


ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:46 PM GMT)

மூங்கில்துறைப்பட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மூங்கில்துறைப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து, வாழை, தக்காளி போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதிக செலவு

குறிப்பாக மூங்கில்துறைப்பட்டை மையமாகக் கொண்டு சவேரியார்பாளையம், மேல்சிறுவள்ளூர், ஆற்கவாடி, சுத்தமலை, ஈருடையாம்பட்டு, மோட்டுகுப்பம், வடமாமாந்தூர், பழையூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர், சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல்,உளுந்து, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானியங்களை அறுவடை செய்து, பெரும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கராபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலையிலும், 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படுவதுடன், நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் அவதியடைந்து வரும் விவசாயிகள் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெரும் நஷ்டம்

இதுகுறித்து பொருவளூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறும்போது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள மூங்கில்துறைப் பட்டு பகுதி கிராம விவசாயிகள் அனைவரும் தானியங்களை விற்பனைக்காக தொலைவில் உள்ள சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மணலூர்பேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். இதனால் என்னை போன்ற விவசாயிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுவதுடன், தானியங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல வாகன வாடகை அதிகம் கேட்கப்படுவதாலும், தானியங்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததாலும் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மூங்கில்துறைப்பட்டில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கவேண்டும்

மூங்கில்துறைப்பட்டு பழையூரை சேர்ந்த விவசாயி தங்கராஜ் கூறும்போது:- நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரிக்கிறோம். பின்னர் தானியங்களை அறுவடை செய்து, வாடகை வாகனங்களில் ஏற்றி தொலைவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். அங்கு தானியங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வாகன வாடகை, ஆட்கள் கூலி அதிகரித்து விட்டதால் எங்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை.

ஏற்கனவே நெல் உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்வதற்காக வடபொன்பரப்பியில் சிறிய அளவிலான கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. அதனையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடி விட்டனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் சங்கராபுரம், மணலூர்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு சென்று தானியங்களை விற்பனை செய்து வரும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story