மரக்கன்றுகள் நடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்


மரக்கன்றுகள் நடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்
x

மரக்கன்றுகள் நடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பசுமை குழு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரங்களை நட்டு வளர்ப்பதற்காக இதுவரை சுமார் 258.32 எக்டேர் பரப்பளவிலான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மண்ணிற்கேற்ப உள்நாட்டு மரங்களை நாற்றங்காலில் வளர்க்க வேண்டும். பசுமை பரப்பினை அதிகரிக்க மரம் நடுவதில் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும், என்றார்.

அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட பசுமை குழுவில் ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அனுமதி வழங்குதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மரம் வெட்டுவதற்காக வரப்பெற்ற விண்ணப்பங்கள் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அரசு மற்றும் பொது நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு முன்பு மாவட்ட வனத்துறையிடம் முறையாக விண்ணப்பித்து, மாவட்ட பசுமை குழுவின் ஒப்பதலுக்கு பின்னர் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றி மரங்களை நட வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் மற்றும் மாவட்ட பசுமை குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story