வாகவாசல் தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டுகோள்
வாகவாசல் தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
பள்ளி கட்டிடம் சேதம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வாகவாசல் பகுதி பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், வாகவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து விட்டதாகவும், அதில் ஒரு சில இடங்களில் பூச்சு உதிர்ந்து விழுந்து கொண்டிருப்பதாகவும், மாணவ-மாணவிகளின் நலன் கருதி கட்டிடத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது. ஆவுடையார்கோவில் அருகே சுந்தானவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தாங்கள் பல ஆண்டுகளாக வசிக்கும் இடத்திற்கு பட்டா கோரி மனு அளித்தனர்.
352 மனுக்கள்
இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 352 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் மல்பெரி நடவு, பட்டுப்புழு வளர்ப்பு குடில், நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள், பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி போன்றவற்றுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டி முடிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 7 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் வெள்ளையம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.