வேப்பூரில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டுகோள்
வேப்பூரில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அதில், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தை நகரம், புறநகரம் என 2 ஆக பிரிக்க வேண்டும். பெரம்பலூர் மேற்கு பகுதியான அம்மாபாளையத்தை மையமாக வைத்து ஒரு புதிய போலீஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். மங்களமேடு போலீஸ் நிலையத்தை 2 ஆக பிரித்து கடலூர் மாவட்ட எல்லையான திட்டக்குடி அருகே ஒரு புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். குன்னம் போலீஸ் நிலையத்தை 2-ஆக பிரித்து வேப்பூரில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். வி.களத்தூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களை சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் இருந்து இன்ஸ்பெக்டர் நிலைக்கு உயர்த்த வேண்டும். பாடாலூரை போலீஸ் உட்கோட்டம் நிலைக்கு உயர்த்த வேண்டும். கன்னியாகுமரி முதல் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலேயே அதிகமாக விபத்து ஏற்படும் இடம் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் முதல் கடலூர் மாவட்டம் தொழுதூர் வரை என்று ஆய்வறிக்கையில் தெரிய வருகிறது. எனவே இப்பகுதிக்கு தனி கவனம் செலுத்தி, தனி ரோந்து வாகனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலைக்கு உயர்த்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி முதல் பாடாலூர் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அதிவேகமாக செல்லும் வாகனத்தை உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும் செயலியை ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து போலீஸ் நிலையத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு நிலையில் உயர்த்த வேண்டும். சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் 3 மாவட்டங்கள் ஒரே இணைப்பில் கல்வராயன் மலை அருகில் இருப்பதால் சாராயம், போதை பொருட்கள் இளம்சிறார்கள், இளைஞர்களுக்கு எளிமையாக கிடைப்பதால் போதைக்கு அடிமையாகிறார்கள். எனவே போலீஸ் துணை சூப்பிரண்டு நிலையை உயர்த்தி அரசு தனியிடம் ஒதுக்கீடு செய்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தை நிறுவிட வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.