அட்டகாசம் செய்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது: கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைப்பு

அட்டகாசம் செய்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால், அதை பிடிக்க வந்த கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
காட்டு யானை அட்டகாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன.
இதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட காட்டு யானை ஒன்று விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறி பவானிசாகர் அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கனை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கும்கி யானைகள் வரவழைப்பு
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ், முத்து என்ற 2 கும்கி யானைகள் பவானிசாகர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 2 கும்கி யானைகள் உதவியுடன், காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழவினர் வனப்பகுதியில் காட்டு யானையை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அட்டகாசம் செய்த யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளனர்.
திருப்பி அனுப்பி வைப்பு
இதைத்தொடர்ந்து 2 கும்கி யானைகளும் லாரிகள் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் சுதாகர் கூறுகையில், 'விளாமுண்டி வனப்பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்த காட்டு யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விளாமண்டி வனப்பகுதியில் காட்டுயானையை தீவிரமாக தேடினர். ஆனால் அந்த காட்டு யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. எனினும் வனத்துறையினர் அட்டகாசம் செய்த காட்டு யானையை மீண்டும் வருகிறதா? என கண்காணித்து வருகின்றனர். இதனால் காட்டு யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என்றார்.






