முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு
வேலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூரணகும்ப மரியாதை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். இந்தநிலையில் 2-ம் நாளான நேற்று கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்குபெற வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இருந்து காலை 9.30 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு செண்டை மேளம், மேளதாளம் முழங்க சிலம்பாட்டத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இசைக்கச்சேரி, பொய்க்கால் குதிரை, கும்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பெண்கள் பலர் வரிசையாக நின்று பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மேலும் ஆங்காங்கே வாழை மரங்களால் தோரணங்கள், சாலையோரம் கட்சி கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
காட்பாடியில் வரவேற்பு
காட்பாடிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், வேலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயரும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில்குமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா, காந்திநகர் பகுதி செயலாளர் என்.பரமசிவம், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் கே.அன்பு மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர்.