அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கேழ்வரகு வழங்கும் திட்டம்
தமிழகத்தில் தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்க விழா அதியமான்கோட்டை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜாராம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா வரவேற்றார்.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கினார். மேலும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 451 பயனாளிகளுக்கு ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
கேழ்வரகு கொள்முதல்
தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க ஏதுவாக நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையம் தர்மபுரி, அரூர் மற்றும் பென்னாகரம் ஆகிய ஒழங்குமுறை விற்பனை கூடங்களில் திறந்து வைக்கப்பட்டு 32.150 மெட்ரிக் டன் கேழ்வரகு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மொத்தம் 1082 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 4,68,320 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் கேழ்வரகு பெற தகுதி பெறும் குடும்ப அட்டைகள் 4,53,679 ஆகும்.தற்போது அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் 18 கிலோ அரிசி, மற்றும் 2 கிலோ கேழ்வரகு (அரிசி உரிமைக்குப் பதிலாக) என மொத்தம் 20 கிலோ உணவுப் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். சிறுதானியங்களை நமது அன்றாட வாழ்வில் உணவு பொருளாக தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் நமது உடல் நலன் மேம்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சிறுதானிய கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, உடல்நலனை மேம்படுத்தும் சிறுதானிய உணவுகளை அறிந்து, சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
சிறுதானிய கண்காட்சி
தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
விழாவில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் முருகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், கைம்பெண் வாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் அருவி, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.