ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்


ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம், அசோக்நகர் அமுதம் நியாய விலைக் கடையில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து பொது வினியோக கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய குடும்ப நல குறியீட்டு அறிக்கையில், இந்தியாவில் உள்ள பெண்களில் சராசரியாக 59 சதவீதம் பேருக்கு ரத்தசோகை உள்ளது. அதிலும் குறிப்பாக 57 சதவீதம் வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளரிளம் பெண்கள் திருமணமாகி குழந்தைப்பேறின்போது ரத்தசோகையினால் அதிக பாதிப்பு ஏற்படும். கரு வளர்ச்சி குறையும் வாய்ப்பு உள்ளது.

பல்லாண்டு வாழ வேண்டும்

ஆண்களில் 26 சதவீதம் பேருக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. இதனால் உடல் உழைப்பில் ஈடுபட முடியாமல் சோர்வு ஏற்படும். சத்தான உணவுகள் சாப்பிடும் போது இந்த பிரச்சினைகள் இருக்காது.

நமது மாவட்டத்தில் இன்றைய தினத்தில் இருந்து 3 ஆயிரத்து 75 பொது வினியோக கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஆயிரத்து 555 அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆயிரத்து 597 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவிற்கும் இந்த அரிசி பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென்றால் குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட்டால், அவர்கள் பெரியவர்களாகும்போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் (பொறுப்பு) தமிழரன், துணை மேலாளர் (தரக்கட்டுபாடு) பொன்னுச்சாமி, துணை மண்டல மேலாளர் மல்லிகா, தாசில்தார் செல்வகுமார், வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story