பள்ளி மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு


பள்ளி மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2023 4:15 AM IST (Updated: 5 Jun 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

சரவணம்பட்டியில் பள்ளி மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

சரவணம்பட்டியில் பள்ளி மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சீதாராம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணராவ். இவர் கோவை சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து, அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்து லட்சுமணராவுடன் தங்கியிருந்தனர்.

சம்பவத்தன்று லட்சுமணராவின் மகன் செல்போனில் பேசிக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுவனிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது அந்த சிறுவன் செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனின் கையில் குத்திவிட்டு, செல்போனை பறித்து சென்றனர்.

இதற்கிடையில் சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் கையில் காயத்துடன் அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சிறுவனிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story