பவானி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்தது: 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்


பவானி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்தது: 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்
x

பவானி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்தது: 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்

ஈரோடு

பவானி

ஈரோடு அடுத்துள்ள திண்டல் வள்ளிபுரத்தான்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று காலை பவானி அருகே உள்ள தொட்டிபாளையம், திருவள்ளுவர் நகர், வர்ணபுரம், போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.

பவானி அந்தியூர் பிரிவு சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார்சைக்கிளை வேன் முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வைக்கப்பட்டு இரும்பு தடுப்பில் மோதி இடது புறமாக வேன் கவிழ்ந்தது. அப்போது வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் 'அய்யோ அம்மா' என்று அலறினார்கள். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஓடிவந்தனர். பின்னர் வேனின் கண்ணாடியை உடைத்து மாணவ, மாணவிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். மேலும் தகவல் கிடைத்தது பவானி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 8-ம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ, 11-ம் வகுப்பு மாணவன் தட்ஷா நிதி, ஆகவா என்ற 4 வயது எல்.கே.ஜி. படிக்கும் குழந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதில் மாணவி அனுஸ்ரீக்கு காலிலும், கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். தட்ஷாநிதியும், குழந்தை ஆகவாவும் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதேபோல் இந்த விபத்தில் வேனின் டிரைவர் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, வேனில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக வந்த அவருடைய மனைவி ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story