தொட்டில் கட்டி விளையாடிய பள்ளி மாணவி கழுத்து இறுகி பலி
வால்பாறையில் தொட்டில் கட்டி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி கழுத்து இறுகி பலியானார்.
வால்பாறை
வால்பாறையில் தொட்டில் கட்டி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி கழுத்து இறுகி பலியானார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொட்டில் கட்டி விளையாட்டு
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். தேயிலை தொழிலாளி. இவருடைய மகள் சஜிதா (வயது 15). இவர் சிங்கோனா அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சஜிதா கடந்த 2-ந் தேதி வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தொட்டில் கயிறு மாணவியின் கழுத்தில் சிக்கியது. இதனால் அந்த மாணவி கழுத்து இறுகி துடித்துடித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் கயிறை அறுத்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சிங்கோனா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கும் அடுத்தடுத்து அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவி சாவு
ஆனாலும் மாணவியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய பள்ளி மாணவி கழுத்து இறுகி பலியான சம்பவம் வால்பாறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.